அரசாங்கத்தின் நெல் கொள்வனவு- 2020/2021 பெரும்போகம். நெல்லினை பயிர் செய்த விவசாயிகளை பாதுகாப்போம்.
கடந்தகாலத்தில் அரிசி விலை தொடர்பாக தனியார்துறையுடன் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் இம்முறை 300,000 மெற்றிக் தொன் நெல்லினை நெல் சந்தைப்படுத்தும் சபையினூடாக கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
1. அதனடிப்படையில் 2.5 ஏக்கர் தொடக்கம் 3.75 ஏக்கர் வரையில் பயிர்செய்துள்ள விவசாயிகள் குறைந்தபட்சம் 1000 கிலோ நெல்லினை கட்டாயமாக அரசுக்கு வழங்க வேண்டும். 2.5 ஏக்கரினை விட குறைவாக பயிர்செய்தவர்களுக்கு கட்டாய தேவைப்பாடு இல்லை.
2. மேலும் 3.75 ஏக்கர் தொடக்கம் 5 ஏக்கர் வரை பயிர்ச்செய்த விவசாயிகள் 1500 கிலோ நெல்லினை கட்டாயமாக அரசுக்கு வழங்க வேண்டும்.
3. எந்த ஒரு விவசாயியும் ஏக்கரளவை கருத்தில் கொள்ளாது ஆகக்கூடியது 5000 கிலோ நெல்லினை வழங்க முடியும்.
4. மேற்கண்டவாறு நெல்லினை அரசுக்கு வழங்காதுவிடின் இலவச உரமானியத்தை எதிர்வரும் போகங்களில் பெற்றுக்கொள்ள முடியாது.
5. ஒரு கிலோ காய்ந்த நாடு (வெள்ளை மற்றும் சிவப்பு) 50 ரூபாய். ஒரு கிலோ காய்ந்த சம்பா மற்றும் கீரிசம்பா 52 ரூபாய்.
வவுனியா மாவட்டத்தில் காய்ந்த நெல்லினை கொடுக்க விரும்பும் விவசாயிகள் தங்களது கமநல சேவைகள் நிலையத்தை நாடி விபரங்களை உறுதிசெய்து விண்ணப்ப படிவத்தினையும் நெற் சந்தைப்படுத்தும் சபையின் இலச்சினை பொறித்த பொதி செய்வதற்கான பைகளையும் பெற்றுக்கொள்ளலாம். ஒரு பைக்கான வைப்பு பணம் 50/= ரூபாய் வீதம் கமநல சேவை நிலையத்தில் செலுத்தி பைகளை பெற்று நெல்லினை சந்தைப்படுத்தும் சபைக்கு கையளித்த பின்னர் மீள வைப்பு பணத்தினை பெற்றுக்கொள்ள முடியும்.
பொதி செய்வதற்கான பைகள் முடிவடைந்தால் விவசாயிகள் பைகளை வெளியில் பெற்றுக்கொள்ள முடியும். ஒரு பைக்கு 40/= வீதம் நெல்லுக்கான கொடுப்பனவுடன் சேர்த்து நெற் சந்தைப்படுத்தும் சபையால் வழங்கப்படும்.
விவசாயிகளால் காய்ந்த நெல்லினை வழங்க முடியாத சந்தர்ப்பங்களில் 14% தொடக்கம் 22% வரையிலான ஈரப்பதன் கொண்ட பச்சை நெல்லினை பின்வரும் நடைமுறைகளுக்கு ஏற்ப வழங்க முடியும்.
1. ஈர நெல்லு – நாடு கிலோ ஒன்று 44/= ரூபாய். ஈர நெல்லு – சம்பா மற்றும் கீரி சம்பா கிலோ ஒன்று 46 ரூபாய்.
2. ஈர நெல்லினை விவசாயிகள் பலர் சேர்ந்து காயவைப்பதற்காக வவுனியாவில் உள்ள தனியார் நெல் ஆலைகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். குறைந்தது 12000 கிலோ நெல் எடுத்துச் செல்லப்பட வேண்டும் மற்றும் ஒரே இனமாக இருக்க வேண்டும்.
3. நெல்லினை பெற்றுக்கொள்ளும் ஆலை உரிமையாளர்கள் 88% நெல்லினை காய வைத்த பின்னர் வழங்க வேண்டும். உதாரணமாக 1000 கிலோ நெல்லினை பெற்றால் 880 கிலோ காய்ந்த நெல்லினை வழங்க வேண்டும். 12% காய வைப்பதற்கான கழிவாகும். காய வைப்பதற்கு அரசாங்கம் ஆலை உரிமையாளர்களுக்கு கிலோ ஒன்றிற்கு 4 ரூபாய் வழங்கும்.
4. காய வைக்கப்பட்ட நெல்லினை மீள விவசாயிகள் ஆலையில் பெற்று நெற் சந்தைப்படுத்தும் சபைக்கு கையளிக்க வேண்டும். இரண்டு போக்குவரத்திற்கும் செலவாக அரசு கிலோ ஒன்றிற்கு 1 ரூபாய் வீதம் விவசாயிக்கு வழங்கும்.
5. பச்சை நெல்லினை காய வைப்பதற்காக மேலதிக கழிவு எனும் ரீதியில் எந்த ஒரு கிலோவினையும் ஆலை உரிமையாளர்களுக்கு விவசாயிகள் வழங்கத் தேவை இல்லை. வழங்கப்படும் பச்சை நெல் முழுவதற்கும் 44 ரூபாய்  அல்லது 46 ரூபாய் வீதம் மேற்கண்டவாறு பெற்றுக்கொள்ளலாம்.
வவுனியாவில் நெல்லினை காய வைக்க கூடிய ஆலை உரிமையாளர்களின் பெயர்களை அருகில் உள்ள கமநல சேவைகள் நிலையங்களில் 05.02.2021 தொடக்கம் பெற்றுக்கொள்ளலாம்.
நெல்லினை சந்தைப்படுத்தும் சபைக்கு கையளிக்கும் போது அல்லது ஆலைகளுக்கு காய வைப்பதற்காக கையளிக்கும் போது அல்லது மீள பெற்றுக்கொள்ளும் போது முறைகேடுகள் அல்லது பிரச்சினைகள் ஏற்படின் வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தி பிரதி ஆணையாளரை அழைக்கவும்: 0778317443.
பிராந்திய முகாமையாளர், நெற் சந்தைப்படுத்தும் சபை- வடக்கு மாகாணம். 0761228712.
பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்ட செயலகத்தினையும் அழைக்க முடியும்.
தகவல்: பிரதி ஆணையாளர், கமநல அபிவிருத்தித் திணைக்களம், வவுனியா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *