உழுந்து உற்பத்தி விவசாயிகளும் உழுந்து மாபிஃயாக்களும்- உழுந்து விவசாயிகளை பாதுகாப்போம். தகவலை பரிமாறுவோம்.
2020ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் அரசு உழுந்து இறக்குமதியினை நிறுத்தியிருந்தது. அரசினால் 16 உற்பத்திகளுக்கான உத்தரவாத விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உழுந்திற்கான உத்தரவாத விலை 220/= ரூபாய் (இதனை வாசிக்கும் பலர் அரசிற்கும் உத்தியோகத்தர்களுக்கும் சித்தசுவாதீனம் இல்லை என நினைப்பார்கள்). இதே போன்று சில பயிர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையில் உற்பத்திகளை விற்க முடியாமல் உள்ளதும் பலர் அறிய வாய்ப்பில்லை (செத்தல்=600, கச்சான் =220).
தற்போது உழுந்திற்கு வருவோம். சில்லறை விலை 2000 ரூபாய்க்கு சில மாபிஃயாக்கள் விற்கும் போது உழுந்தினை இறக்குமதி செய்ய வேண்டும் என கூறி ஒரு சிலர் தற்போது விவசாயிகளுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர்.
இம்முறை உழுந்து விதையினை ஆயிரக்கணக்கில் கொடுத்து வாங்கி பயிர்செய்தும் விளைச்சலில் பாரிய வீழ்ச்சியினை எதிர்நோக்கியுள்ளோம். சராசரி ஒரு ஏக்கருக்கு  350கிலோ கிடைக்க வேண்டும். ஆனால் மழையின் பாதிப்பினால் 150 கிலோ தொடக்கம் 250கிலோ வரையிலான விளைச்சல் மட்டுமே கிடைக்கின்றது. பல இடங்களில் பாரிய அழிவும் ஏற்பட்டுள்ளது. காப்புறுதியினை அறிமுகப்படுத்தியும் பலர் ஆர்வம் காட்டவில்லை.
மிக விரைவில் அனுராதபுர மாவட்டத்தின் உழுந்தும் சந்தைக்கு வரும். அங்கும் விளைச்சல் குறைவு என்பதுடன் பாதிப்புக்களும் உள்ளது.
இவ்வளவு இடர்களுக்கும் மத்தியில் உழுந்தினை உற்பத்தி செய்தால் மாபிஃயாக்கள் மொத்த கொள்வனவு விலையினை கிலோவுக்கு 1300/= இலிருந்து 350/= ரூபாய்க்கு கொண்டுவந்துள்ளனர். இது வழமையாக உற்பத்திகள் சந்தைக்கு வரும்போது இடைத்தரகர்கள் மேற்கொள்ளும் மாபிஃயா வேலை.
எனவே விவசாயிகள் இயலுமானவரை தமது உற்பத்திகளை விற்பனை செய்யாது சிறிது காலம் பாதுகாப்பாக வைத்திருந்து விற்பனை செய்வதுடன் சில்லறை விற்பனையிலும் ஈடுபட முடியும்.
விவசாயிகளை பாதுகாப்பதற்காகவே குறைந்த பட்சம் 460/= என விலையினை வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களம் அறிவித்திருந்தது.  விவசாய திணைக்கத்தின் விதைகள் பிரிவும் விரைவில் விதை நோக்கத்திற்காக கொள்வனவினை ஆரம்பிக்க உள்ளனர். அதன் போது குறைந்தபட்சம் 600/= ரூபாயாக நிர்ணயிக்க சந்தர்ப்பம் உள்ளது.
உழுந்து வடையினையும் தோசையினையும் உண்பது சாமானியனின் கனவாக மாறியுள்ளதை கருத்தில்கொண்டு நுகர்வோருக்கும் பாதிப்பின்றி விவசாயிகள் உழுந்தினை இடைத்தரகர்கள் இன்றி நேரடி விற்பனையில் ஈடுபட வேண்டும்.
இவ்வருடம் ஜனவரியில் வவுனியா செட்டிகுள பிரதேச விவசாயிகள் அனைவரும் இணைந்து குறைந்தபட்சம் 500/= ரூபாயாக விற்பதாக தீர்மானம் எடுத்துள்ளார்கள் என்பதையும் விவசாயிகள் அனைவரும் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இயலுமானவரை 500/= ரூபாய்க்கு மேல் விற்பனை செய்து இலாபத்தினை பெற்றுக்கொள்ள விவசாயிகள் நடவடிக்கை வேண்டும். முடியாத சந்தர்ப்பத்தில் மட்டும் கமநல சேவைகள் நிலையத்திற்கு 460/= வீதம் கையளிக்க முடியும்.
பிரதி ஆணையாளர்,
கமநல அபிவிருத்தித் திணைக்களம்,
வவுனியா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *