இலங்கையின் உள்நாட்டு உழுந்து உற்பத்தியினை ஊக்குவித்து வெளிநாட்டு உழுந்து இறக்குமதியினை குறைத்து உள்நாட்டு விவசாயிகளுக்கு நியாயமான நிலையினை பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் விவசாய அமைச்சினால் கமநல அபிவிருத்தி திணைக்களத்துடன் இணைந்ததான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் வவுனியா மாவட்டத்தினை விசேட உழுந்து வலயமாக பிரகடனப்படுத்தி 16000 ஏக்கரில் உழுந்து உற்பத்தி வேலைத்திட்டம் கௌரவ விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன்  அவர்களின் வேண்டுகோளின் பேரில் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர அவர்களின் தலைமையில் மாகாண விவசாய அமைச்சர் கௌரவ க.சிவநேசன் அவர்கள் மற்றும் கௌரவ பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் அவர்களது பங்குபற்றலுடனும் கடந்த 05.10.2018 அன்று வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் வடக்கின் விவசாய துரித மீளெழுச்சி திட்டத்தின் கீழ் வவுனியா கமக்கார பெருமக்களுக்காக உழுந்து விதை வழங்கல் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இவ் வேலைத்திட்டம் தொடர்பாக வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் மாவட்ட உதவி ஆணையாளர் கருத்து தெரிவிக்கும் போது, விவசாய அமைச்சின் மேற் சொன்ன திட்டம் 28 மில்லியனுக்கு மேற்பட்ட செலவில் மேற்கொள்ளப்படுகின்றது. விவசாய திணைக்களத்தின் பதிவு செய்யப்பட்ட மற்றும் அத்தாட்சிப்படுத்தப்பட்ட உழுந்து விதைகள் தற்போது கமநல சேவைகள் நிலையங்களுக்கு தருவிக்கப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யும் நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருகின்றது. இந்த திட்டத்தின் கீழ் விவசாய திணைக்களத்தின் பதிவு செய்யப்பட்ட தரமான உழுந்து கிலோ ரூபாய் 360 ஆகும். 50% மானிய விலையில் விவசாயிகள் ரூபாய் 180 ஐ செலுத்தி பெற்றுக் கொள்ள முடியும். அதே போன்று விவசாய திணைக்களத்தின் அத்தாட்சிப்படுத்தப்பட்ட தரமான உழுந்து கிலோ ரூபாய் 350 ஆகும். 50% மானிய விலையில் விவசாயிகள் ரூபாய் 175 ஐ செலுத்தி பெற்றுக் கொள்ள முடியும். எனினும் விவசாயிகள் விதை உழுந்தினை பெற்றுக்கொள்ளும் வீதம் குறைவாக உள்ளதுடன் தனிநபர்களிடம் குறைந்த விலையில் பெற முடியும் என்ற கருத்து ஒன்றும் நிலவுகின்றது. உண்மையில் விவசாய திணைக்களத்தின் பதிவு செய்யப்பட்ட மற்றும் அத்தாட்சிப்படுத்தப்பட்ட விதைகள் தரமானவை என்பதுடன் முளைதிறன் மிக அதிகமானவையுமாகும். தனி நபர்களிடம் காணப்படும் உழுந்தினை இதனுடன் ஒப்பிட முடியாது. வவுனியா மாவட்டத்தின் விவசாயிகள் உழுந்து வேலைத்திட்டத்தின் முக்கியத்துவத்தினை உணர்ந்து இவ் வேலைத்திட்டத்தில் பங்குபற்றி நன்மைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என இத்தருணத்தில் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் உழுந்து பயிர்ச்செய்கை ஏக்கரளவை அடிப்படையாக கொண்டு சுங்க திணைக்களத்தினால் உழுந்து இறக்குமதி மீது வரி விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதனால் உழுந்திற்கு நியாயமான விலை கிடைக்கும். எனவே உழுந்து பயிரிட விரும்பும் விவசாயிகள் யாராயினும் தங்கள் பகுதி கமக்கார அமைப்பின் உறுதிப்படுத்தலுடன் 50% பணத்தினை செலுத்தி கமநல சேவைகள் நிலையங்களில் உடனேயே விதை உழுந்தினை பெற்றுக்கொள்ள முடியும். அதற்கான ஒப்பந்தத்தினையும் உடனேயே கைச்சாத்திட முடியும். உழுந்திற்கான பயிர்க்காப்புறுதியினை விரும்பியவர்கள் 40000 இழப்பீட்டிற்காக ஏக்கருக்கு 3600 ரூபாயினை செலுத்தி கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபையினூடாகவோ அல்லது ரூபாய் 20000 இழப்பீட்டிற்காக ஏக்கருக்கு 1450 ரூபாயினை செலுத்தி சணச காப்புறுதியிலோ மேற்கொள்ள முடியும். மேலும் மாகாண விவசாய விரிவாக்கல் திணைக்களத்தினை தொடர்பு கொண்டு (0242222324) உழுந்து பயிரிடும் இயந்திரத்தின் மூலம் பயிர்ச்செய்கையினை மேற்கொள்ளலாம். மேலதிக விபரங்களுக்கு உரிய கமநல சேவைகள் நிலையங்களை தொடர்பு கொள்ளவும். கோவில்குளம்- 0242221053, செட்டிக்குளம்- 0242260051, உளுக்குளம்- 0243245723, மடுக்கந்தை- 0242053254, ஓமந்தை- 0242052722, பம்பைமடு- 0245673254, கனகராயன்குளம்- 0242051360, நெடுங்கேணி- 0242053015. மாவட்ட அலுவலகத்தின் பிரதம முகாமைத்துவ உதவியாளரை அழைக்கவும் (CC)- 0242222362, பிரச்சினைகள் ஏதும் இருப்பின் மாவட்ட உதவி ஆணையாளரான என்னை தொடர்பு கொள்ளவும்-0778317443.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன